Friday, November 10, 2006

"மழை"யால் "ஈ'

"மழைப் போட்டி"யில் முதற் பரிசு....தோழியர் கெளசல்யாவுடன் பங்கிட்டுக் கொள்கின்றீர்கள்...
உடனடிப் பரிசு....'போர்ப்ரேம்ஸ்' ப்ரிவியூ அரங்கில்...
படம்?
"ஈ"
தடாலடி அறிவுப்புகள் தொடர்ந்தன...


குளுகுளு அரங்கில் 'சில்'லென ஆரம்பம்.
கதை....'அண்ணன்' லக்கிலுக்(அட! வலையுலகில் நம்ம சீனியர்பா) முன்பே விமர்சனப்பதிவில் பதிந்துள்ளார்.
வல்லாதிக்க நாடுகள், வளர்முக நாடுகளை எப்படி தமது 'சோதனைஎலி'களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன? ஏழைநாடுகளின் 'கறுப்புஆடுகள்' எவ்விதம் துணை போகின்றன? பாதிக்கப் படுவது யார்? பயனடைவது யார்? பூனைக்கு மணி கட்டப் போராடும் எலிகள் என்னவாகின்றன?-இதுதான் கதைக் கரு!
நறுக்கு தெறித்தாற்போல் நெருப்பு வசனங்கள்;இயல்பான காட்சி அமைப்பு;இதமான படப்பிடிப்பு...
ஜனநாதன் இயக்கம்.நிறைய விஷயங்களை சொல்லாமலே சொல்கின்றார்-காக்கா கோட்டையில் சிங்காரவேலர் பேனர்......டாக்டர் ராமகிருஷ்ணனின் நெற்றி......நெல்லை கண்ணனின் தாடி,தொப்பி,உயிர்த்தியாகத்தின் பொழுது அவர் அமர்ந்திருக்கும் பாணி........இது போல் நிறைய உண்டு!
மழைக்காட்சிகள் வருகின்றன;நாயகி நனைகிறாள்;விரசமில்லை;பெண்மையை எக்ஸ்ப்ளாய்ட் செய்யாததற்கு டைரக்டருக்கும் பாராட்டுகள்!


ஒரு நல்ல படம், முடிந்த பின்னரும்,பார்த்தவர் மனதில் சில அதிர்வுகளை ஏற்படுத்த வேண்டும்....
அத்தகைய அதிர்வை 'ஈ' ஏற்படுத்துகின்றது!

Wednesday, October 25, 2006

"கடன்பட்டார் நெஞ்சம் போல......."

"கடன்பட்டார் நெஞ்சம் போல(போலும்?) கலங்கினான் இலங்கை வேந்தன்"-- இடஞ்சுட்டி விளக்கக் கோரியிருந்தார், சக வலைப்பதிவாளர் ஒருவர். அவர்சார்பில் விடைதேடி வலைப்பதிவுகளில் புகுந்தேன்.......

அய்யகோ!
வெவ்வேறான இருவிடைகள் கிடைத்துள்ளன. அவை:

(1)"இன்று போய் நாளை வா" என்று இராமன் இராவணனை
அனுப்பிவைத்த பின்னர், இராவணனின் மனநிலையை விளக்கும் வகையில்
இவ்வாறு கூறப்படுவதாக ஒரு பதிவில் கூறப்பட்டு உள்ளது.
(2)தன்மகன் இந்திரஜித் (மேகநாதன்) வீரமரணம் அடைந்த நிலையில்,இராவணனின் மனநிலையை விளக்கும் வகையில் இவ்வாறு
கூறப்படுவதாக மற்றொரு பதிவில் விளக்கப்பட்டு உள்ளது.

இவையிரண்டில் ஒன்று தவறானது; அல்லது இரண்டுமே தவறாக
இருக்கக்கூடுமோ?

விபரம் அறிந்தவர்கள் சரியான இடஞ்சுட்டி விளக்குவார்களா?

Thursday, October 19, 2006

அரசு (சமூக)ச் சர்வாதீனங்கள்,

(நிறைவுப்)போட்டி, சர்வாதீனம் (Perfect competition & Monopoly)-- இவையிரண்டில் எது சிறந்தது எனில், நிச்சயமாக போட்டிதான் சிறந்தது. போட்டிச்சந்தையில் விற்போரும் வாங்குவோரும் பலர்; சுய ஆதாயம் கருதி விலையைக் கட்டுப்படுத்த எவராலும் முடியாது; ஓரியல்பான பொருட்கள்(homogeneous products);நியாயமான விலை('bon prix');ஒரே விலை;உற்பத்தியும் அதிகம்;காரணிகளுக்கு வேலைவாய்ப்பும் அதிகம்.
சர்வாதீனனுக்கு போட்டி இல்லை. அமிதலாபம்(Supernormal or abnormal profit) ஈட்டுவதே அவன் நோக்கம். எப்படி? 1)தனது பொருளுக்கு உயர்ந்தபட்ச விலை விதிக்கலாம். ஆனால் இது பொதுமக்களால் தாங்கக்கூடிய விலையாக இருக்க வேண்டும். அதாவது அவர்களுடைய வருமான வரம்பிற்குள் இருக்கவேண்டும். இல்லாவிடில் வாங்குவது குறையும்;விற்பனை குறையும். 2)சர்வாதீனன் மற்றொரு உத்தியைப்பின்பற்றலாம். உற்பத்தியைக் குறைத்து விட்டால் பொருளுக்குத் தட்டுப்பாடு (பற்றாக்குறை) ஏற்படும். மக்களே போட்டிபோட்டு விலையை உயர்த்தி விடுவார்கள்.இம்முறைதான் சர்வாதீனனுக்கு அனுகூலமானது
போட்டிவிலையைக் காட்டிலும் சர்வாதீன விலை அதிகம்;போட்டி உற்பத்தியைக்காட்டிலும் சர்வாதீன உற்பத்தி குறைவு. எனவே போட்டியே சிறந்தது. ஆனால் நிறைவுப்போட்டி எங்கே உள்ளது? பாடநூல்களிலும் வகுப்பறைவிவாதங்களிலும் மட்டுமே உள்ளது.
அரசு(சமூக)ச் சர்வாதீனத்தால் (State or Social Monopoly) பொதுநலம் அதிகரிக்கும்;பெருவாரியான மக்களுக்கு பயன் கிட்டும். தனியார் சர்வாதீனத்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் (குறைவான உற்பத்தி, அதிகவிலை, விலை பேதங்காட்டுதல்,வேலைவாய்ப்பு குறைதல்...........)
அரசுச்சர்வாதீனம் எப்பொழுது ஏற்படுகின்றது? சிலவற்றை தனியார்துறையில் விடுவது நாட்டுநலனுக்கு ஆபத்து (இராணுவம், போலீஸ், நீதித்துறை);சில தொழில்களில் தேவையான அளவிற்கு முதலீடு செய்ய தனியாரால் முடியாது (இந்திய ரயில்வே);சிலவற்றை நிர்வகிக்கத் தனியாரால் முடியாது (இரயில்வே,அஞ்சல்& தந்தி); சிலவற்றில் ஈடுபட தனியார் துறை முன்வராது ( வாடிகால், கழிவுநீர் வெளியேற்றம்)சில துறைகளால் தனியாருக்கு லாபமில்லை( குடிநீர், பூங்கா) இவைபோன்ற சமூகச்சர்வாதீனங்களால் சமூகநலன் அதிகரிக்கும். அவை நிரந்தரமானவை. நிர்வாகப் புல்லுருவிகளால் ஏற்படக்கூடிய முறைகேடுகளை ஒழித்துவிட்டால் சமூகச்சர்வாதீனமே சிறந்தது
தனியார் சர்வாதீனம் காலப்போக்கில் மறையும்; அல்லது கட்டுப்படுத்தப்படும